Saturday, 16 January 2010

பானையில் பால் பொங்குவதல்லப் பொங்கல்

-சூர்யா-
பானையில் பால் பொங்குவதல்லப் பொங்கல்
உள்ளத்தில் நன்றி பொங்கி எழுவதே பொங்கல்
நன்றி எப்பவும் எங்கும் பொங்கிட வேணும்
நன்றி பொங்கிடவேணும் இந்த நானிலத்தில்
செய்நன்றி கொன்றவனுக்கு உய்வில்லை
நன்றி மறந்தார்க்கு வாழ்வில்லை - அது
பொய்யாமொழி தந்த தமிழனின் சத்தியவாக்கு
சோற்றில நாம் தினம் கைவைக்க
சேற்றில் கைவைத்தவனுக்கு கூறு நன்றி
பால் தந்து தயிர் ஆகி இனிய மோராகும்
கால் நொந்தாலும் அயராது உழைப்பைத் தரும்
அந்தக் கோவினத்திற்கு கூறு தினம் நன்றி
கதிரறுத்துப் பொங்க வைக்கிறோம் - அந்தக்
கதிரவனுக்கு என்றும் கூறு கோடி நன்றி
அடியில் நெருப்பை வைத்து எரித்தாலும்
கலங்காது இந்தப்பானை பால் வார்க்கும்
பானைக்கும் இதை வார்த்தவனுக்கும் கூறு நன்றி
துயர் பொங்கிவரினும் கலங்காது கூறு நன்றி

Wednesday, 13 January 2010

தைப்பொங்கல்: துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்

இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம். எமக்காக உழைக்கும் உழவர், எருது, பசு மற்றும் ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்யாது நன்றியாக இருப்போம்.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு!



என்பது பொய்யாநெறி தந்த வள்ளுவன் வாக்கு.

எத்தகைய அறத்தை அழிப்பவனுக்கும் பாவத்தினின்று நீங்கும் வழியுண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவனுக்கு அதினின்று உய்யும் வழியில்லை என்பது வள்ளுவன் வாக்கு..

* ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்து பெற்றதாய்க்கு நன்றியாக இருப்பதே தமிழர்தம் நெறியாகட்டும்.

* எமையெல்லாம் ஆளாக்கிய தந்தைக்கு நன்றியாக இருப்போம்.

* நல்லதைத் தந்து எம் கழிவுகளை மட்டும் நாளும் ஏற்று சமநிலை பேணும் இயற்கைத் தாய்க்கு நன்றியாக இருப்போம்.

* எமக்காக உழைக்கும் உழவர், எருது, பசு மற்றும் ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்யாது நன்றியாக இருப்போம்.



அத்தகைய பெருமைக்குறிய ஆற்றவேண்டிய நன்றிக்கடமையை விட்டுவிட்டு மாண்டபின் திவசம் கொடுப்பது, கொடை கொடுப்பது, குண்டூசி கொடுப்பது என்பதெல்லாம் வீண்.

அகிலப் பற்றையெல்லாம் அகற்றிய துறவியாலும் அன்னைப் பற்றை அகற்றிவிடமுடியுமா? கடவுளுக்கு நேரானவள் அல்லவா அவள்! பெற்ற அன்னையையும் காக்கும் இயற்கை அன்னையையும் தொழுவது ஆண்டவனைத் தொழுதற்கு நேரல்லவா?

முற்றும் துறந்த நிலையில் கூட பட்டினத்தார் தன் தாயின் இறப்பை அறிந்து ஆற்றாது கண்ணீர் விட்டு வருமாறு பாடுகிறார் :


ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?



என்று பாடல்கள் செய்து தன் துயரத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் தாயின் சிறப்பை என்னவென்று கூறுவது!

ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்துபெற்ற தாயும், காலமெல்லாம் அனைவரையும் சுமக்கும் இயற்கைத் தாய்க்கும் தைத்திருநாளில் மட்டுமன்றி என்றும் நன்றியுடன் இருப்போம்.

Sunday, 3 January 2010

சிவபுராணம்

ஓம் மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகள் போற்றி

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.



ராஜரிசி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தம் திருவாய் மலர்ந்து அருளிய ஞான உபதேசங்கள்

சிவபுராண விளக்கம் கீழே ஒலி வடிவத்தில்...





திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி

- ச. சுவாமிநாதன் -

இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். இறைவனை வருணிக்க வந்த உபநிஷத் “அணுவோர் அணீயாம் மஹதோர் மஹீயாம்” என்று (அணுவுக்கும் சிறியவன் , பிரமாண்டமான மலைக்கும் பெரியவன்) கூறுகிறது. எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.

அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர். இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

ஐம்பது ண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.


திருமூலர் கணக்கு

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974
(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)

நன்றி : செய்தி மடல், இலண்டன் சத்சங்கம்

.