Saturday, 14 November 2009

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

“அருட்பெருஞ் சோதி; அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் சோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”


- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ஆன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.


நன்றி:
Vallalar.org

5 comments:

  1. எளியேனுக்கு சாய்பாபா தொட்டு கல்கிபகவான் அடக்கலாக இராமலிங்க வள்ளாலர் பெருமான்வரை யாரையும் நிந்திக்கும் மனம் இல்லை. ஆனால்; ஈழவள நாட்டிலே தோன்றி திருவாவடுதுறை ஆதீனத்தின் நன்மதிப்பைப் பெற்று அறுபத்திநான்காவது நாயனாராகப் போற்றத்தகு பெருமையுடைய நாவலர் பெருமானுடைய கருத்துக்கு மாற்றுக் கருத்தை சிந்திக்கும் திறன் இல்லை.

    சைவ சித்தாந்தத்தை நிராகரித்து, சைவநெறியில் இருந்து விலகி சுத்த சமரச சன்மார்க்க நெறி என ஒருநெறியை வகுத்து, உருவ வழிபாட்டை புறக்கணித்து, அம்மையிடம் ஞானப்பால் உண்ட சம்பந்தர் வாழ்ந்த உயர்ந்த சைவ சித்தாந்த வாழ்வை "இலட்சியம் வைப்பதற்கு பிரயோசனமற்ற நெறி'எனப் பொருட்பட உரைத்துள்ளபோது வள்ளாலர் வழியை சைவ சமயத்தவர் போற்றுவதை ஏற்க இயலாது.

    சாயி தொண்டர் சாயியைக் கடவுளாகக் கருதுவதற்கு எதிர்க்கருத்தை என்றும் நான் கொண்டதில்லை. சைவ சித்தாந்த பண்பாட்டை உடையோர் சைவ சித்தாந்தத்தை மறுத்தவரை போற்றுவதை ஏற்பதும் இல்லை.

    வள்ளாலர்பற்றி புகழ்துரைத்துள்ள இணையங்கள் "நீதிமன்றில் நாவலர் வென்றதை" எங்கும் குறிப்பிடாது நாலவர் அவர் வரும்போது எழுந்துநின்றார் எனக்கூறி நாவலரின் பெருமையை இருட்டடிப்புச் செய்வதைக் காணும்போது வாட்டமே உள்ளாகின்றது.

    வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளாலரின் உள்ளத்தை பெரிதும் மதிப்பதாலேயே குறித்த சொற்றொடரை எனது வலைப்பூவில்கூட "சைவரின் இயல்பாக" சுட்டியுள்ளேன். ஆனால் வள்ளாலர் சைவநெறியைத் துறந்தமை, சைவ சித்தாந்தத்தை இலட்சியத்தை அடைய பயன்படுத்த முடியாது என உரைத்தமை என்பன அவரை சைவராக ஏற்க இயலாதுள்ளது. ஆனால் திருநீறணிந்த பயனால் சைவ உள்ளம் அவருக்குள் வாழ்ந்தது! அதுமட்டும் திண்ணம்!
    எங்கனம் ஆதிசங்கரர் நீறணிந்து சுமார்த்தநெறியைத் தோற்றுவித்தாரோ அங்கனமே வள்ளாலரின் சுத்த சமரச சன்மார்க்க நெறி எனக் கொள்வது சைவசமயத்தவருக்கு அழகு.

    வள்ளாலர் பெருமான்பற்றிய சைவசார்புடைய பூரணமான விளக்கத்தை இந்தச் சுட்டியை அழுத்துவதன் மூலம் அறியலாம் எனநினைக்கிறேன்.
    http://www.saivaneri.org/eswaramoorthypillai/vallalar-arutpa-or-marutpa.htm

    அன்னை தெரேசாவை மதம்கொண்டு பார்த்தால் அவரது தொண்டுள்ளத்தை உணரமுடியாது. அதுபோல் சாராத தேவியும் என்க.
    எனவே, விவேகானந்தர்,இராமகிருஷ்ணர், சாரத தேவி, சாயி பாபா, கல்கி பகவான் என பல அருளாளர்களை மதிப்பதுபோலவே வள்ளாலரையும் மதிக்கிறேன். ஆனால் அவரது சிலையை ஆலயத்துள் நிறுவுவது......வழிபடுவது என்பவை ஏற்க இயலாது.அவரது வழியை ஒழுகுவதானால் சைவ சித்தாந்தத்தை துறக்க வேண்டும்.

    ஞானப்பால் உண்ட அருமையைப் பெற்ற திருஞானசம்பந்தர் தமிழால் சீரும் சிறப்பும் பெற்ற சைவ சித்தாந்த நெறியை, எந்தத் தமிழுக்காய் திருவெண்ணெய் நல்லூரில் இருந்துவந்து பித்தன் எனப் பெயர் எடுத்தாரோ எம்பிரான்; அந்த வன்தொண்டரின் தமிழால் போற்றப்பட்ட சைவ சித்தாந்த நெறியை, எம்பிரான்;திருமறைக் காட்டிலே எவரது தமிழுக்காய் பத்துப் பாடல்கள் பாடும்வரை பொறுமையாக இருந்து அவற்றைக் கேட்டு தாமதமாகக் கதவைத் திறக்கச் செய்தாரோ -அந்த அப்பரடிகளின் தமிழால் அழகுபடுத்தப்பட்ட சைவ சித்தாந்த நெறியை, சிவபெருமான்; எவருடைய தமிழைப் பிரதி எடுத்து தன்னுடன் எடுத்துச் சென்றாரோ, எவரது தமிழை ஏட்டிலே எழுதி தனது கையொப்பத்தை வைத்தாரோ-அவரது தெவிட்டாத தேன் தமிழால் உலகெலாம் புகழ்பெற்ற சைவசித்தாந்த நெறியை "இலட்சியத்துக்கு உதவாது" என்று புறக்கணிக்கும் மடமை நாவலர் பூத்த மண்ணுக்கு இல்லை.ஈழவள நாட்டிற்கு இல்லை. அங்கு பிறக்கும் பயனைப் பெற்ற எமக்கும் இல்லை.

    நால்வர் வாழ்ந்த நெறியை ஐயத்துடன் ஒழுகியதாலேயே, சந்தேகத்துடன் பார்த்ததாலேயே வள்ளலாருக்கு நால்வரின் பேறு எட்டாக்கனியாகிவிட்டது.எனவே புளித்துள்ளது!!! அவருக்கு புளித்ததுக்கு நியாயமுண்டு!!! ஆனால் ஏனையவருக்கு புளிக்கும் என அவர் உரைத்ததில் எந்த நியாயமும் இல்லை.

    தங்கள் வலைப்பூ; திருமந்திரத்தால் சிவபூமி எனப்போற்றப்பட்ட ஈழவளநாட்டில் உதித்த நாவலர் பெருமானால் மீண்டும் அழகுபடுத்தப்பட்டு ஈழநாட்டிலும் தமிழகத்திலும் வளர்த்தெடுக்கப்பட்ட உயர்ந்த சைவ நெறியாகிய சித்தாந்தநெறிக்கு அபகீர்த்தியை தோற்றுவித்தல் கூடாது என்ற உயர்ந்தநோக்கிலேயே எளியேனின் பின்னூட்டம் இங்கு மலர்ந்துள்ளது. தங்கள் வலைப்பூவின் சைவப்பணிக்கு மங்காத புகழ் ஓங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி! நணபரே. காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சைவ சமய, சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து வள்ளலார் குரல் எழுப்பினார். அன்பே சிவமென்ற அடிப்படைச் சைவசித்தாந்தக் கொள்கையையே ஆணித்தரமாக வலியுறுத்தயுள்ளார் என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து. அது தவறாக்கூட இருக்கலாம். அவ்வாறாயின் மன்னித்தருளவும்.

    ReplyDelete
  3. முருகவேல்23 November 2009 at 01:24

    சிவத்தமிழோன் : "நால்வர் வாழ்ந்த நெறியை ஐயத்துடன் ஒழுகியதாலேயே, சந்தேகத்துடன் பார்த்ததாலேயே வள்ளலாருக்கு நால்வரின் பேறு எட்டாக்கனியாகிவிட்டது.எனவே புளித்துள்ளது!!! அவருக்கு புளித்ததுக்கு நியாயமுண்டு!!! ஆனால் ஏனையவருக்கு புளிக்கும் என அவர் உரைத்ததில் எந்த நியாயமும் இல்லை."

    மிகவும் தவறான கருத்து என்பது அடியேனின் வருத்தம். நால்வர் கருத்துக்கு முறண்பட்டவர் அல்ல. அவர் நால்வர் பதிகங்களுக்கு கொடுத்த விளக்கம் வள்ளலாருக்கு முன்னரும் பின்னரும் யாரும் கொடுத்ததில்லை.

    முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
    பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
    சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
    அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
    - மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)


    ஆறுமுகநாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்த அருட்பணி சாலச் சிறந்தது. ஆனால் மூடத்தனத்தையும் சாதிய வேற்றுமையைக் களைய விளைந்த அருலாளரை மூர்க்கமாக எதிர்த்த அடிப்படைவாதி. இந்த அடிப்படைவாதமே நாவலரால் திருவள்ளுவரையும் அருலாளர் என ஏற்கமுடியாது போனது. சாதி, மதம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வேறுபட்டு மனிதநேயம், ஆன்மநேயம் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு மனிதனை மனிதனாக மட்டும் வாழச்சொல்லாமல் அவனை கடவுள் நிலை அடைவதற்கும் வழிகாட்டுகிறது சைவசித்தாந்தம். மேலும் மனிதன் இயற்கையின் படைப்பு என்ற உண்மையையும் மனம், உடல், ஆன்மா என்ற ஆழமான மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி உலகிற்கு உண்மை ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே அருட்சோதி வள்ளல் இராமலிங்கசுவாமிகள். சைவநெறி அன்புநெறி. மூர்க்கர்கள் கருத்தை அப்படியே உள்வாங்குவது தவறு. நாவலரும் தன் அடிப்படை வாதத்திற்கு எதிரானவரை மூர்க்கமாக எதிர்த்தார். இவரைவிட பாரதியார் எவ்வளவோ மேல் என்பதே என் கருத்து.

    ReplyDelete
  4. http://www.saivaneri.org/eswaramoorthypillai/vallalar-arutpa-or-marutpa.htm
    இவர்களுடைய இன்னுமொரு பக்கம்
    http://www.saivaneri.org/eswaramoorthypillai/vallalar-a-sex-maniac.htm
    என்னே! வெகுளித்தனம். இவர்கள் சைவர்களா?! முருகவேல் கூறியபடி முத்திநெறி அறியாத மூர்க்கரே.

    ReplyDelete
  5. If interested let's travel in the path of vallal permuman. Don't waste time in discussing about these gems. Life is short...

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.