Thursday 5 November 2009

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி நரகத்திற்குப் போகாதீர்

இறையின்பத்தை அடைய அன்பே ஒரே மார்க்கம் என்பதே உலகிலுள்ள எல்லா வேதங்களினதும் சாரமாகும். இதை உணராத மனிதர் மாற்றுவழியில் சென்று இறுதியில் நரகத்திற்கே செல்கின்றனர். இதையே சைவசித்தாந்தமும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
-திருமூலர்-

அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. இவ்வன்பு எல்லோரிடமும் இருப்பதுதான். இருப்பினும் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமை காரணமாக அவ்வன்பின் தன்மை வேறுபடும். அங்ஙனம் வேறுபடாது ஒரே தன்மைத்தாய் உள்ள அன்பையே இங்குத் திருமூலர் குறித்துள்ளார்.


இதனால்தான், காரைக்காலம்மையார் திருக்கயிலைப் பெருமானிடம் "இறவாத இன்ப அன்பு" வேண்டினார். இறவாத எனில், கெடுதல் இல்லாததும் என்றும் நீங்காததும் நிலையானதும் ஆகும். அத்தகு நிறைவான இன்பமே பேரின்பம். அப் பேரின்பத்தைப் பெறவே நிலையான அன்பை இங்ஙனம் வேண்டினார். அன்பே இன்பத்திற்கு அடிப்படை என்பதை உணர்த்தினார்.


அன்பும் சிவமும் வேறல்ல என்பதுபோலவே அன்பும் இன்பமும் வேறல்ல.நமது அன்பின் முதிர்விலே முடிவிலா இன்பமான சிவம் வெளிப்பட்டுத் தோன்றும்.


நிலையான அன்புப் பிழம்பாகச் சிவம் திகழ்கிறது. அதனை அடைய நாமும் அன்புருவாய், நிலையான அன்புருவாய் ஆகவேண்டும். நமது அன்பு வளரும்; தளரும்.இறை அன்போ என்றும் ஒரே படித்தாய், உயிர்களிடத்தே நீங்காதிருக்கும். இதனை மணிவாசகரும், திருவாசகம், போற்றித்திருவகவலில் "சாயா அன்பு" என்று குறிப்பிடுகிறார்.

"சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயேயாகி வளர்த்தனை போற்றி."


கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.
-திருவருட்பா (இறவா நிலை)-

தான் செய்த பாவங்கள் நீங்குவதற்காக கங்கை, காவிரி இன்னும் அநேக புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்று நினைப்பவர்கள் உண்டு. பெருமைக்குரிய கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்துவந்தால் இறையருள் பெருகும் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் விரத அனுஷ்டானம் கடைபிடித்து பட்டினி கிடந்து உடம்பை வருத்தி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் அநேக வேதங்களில் சொல்லப்பட்ட வேள்விகள் செய்து அதன்மூலம் கடவுளின் ஆசி பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் அந்தணர்களாகிய வேதியர்களுக்கு அவர் விரும்புகின்ற அனைத்தும் அள்ளித்தந்து இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் பசுவை பூஜித்தும் அதனுடைய கழிவைப் பருகி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களையும் பின்பற்றி நடந்தபோதிலும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எந்த வகையிலும் ஆன்மலாபம் பெறமுடியாது என்பது அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆசான் இராமலிங்கசுவாமிகளின் உபதேசமாகும்.


ஆன்ம லாபம் பெற விரும்புகிறவர்கள் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யாவர்க்கும்ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும்ஆம் பசுவுக் கொருவா யுறை
யாவர்க்கும்ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்கும்ஆம் பிறர்க்கு இன்னுரை தானே
-திருமந்திரம்-


அன்பும் அறிவும்:


சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.


மெய் அன்பில் மெய்யறிவும், மெய்யறிவில் மெய்யன்பும் கலந்தே இருக்கும் என்பது நியதி. இங்கு அன்பின் அடிப்படை அறிவின் அடிப்படை என்றது மிகுதி பற்றி எழுவதையே குறிப்பதாகும்.


இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும். ஆனால் இப்புகழ் உண்மைக்கு மாறாக உபசாரமாகப் பாடப்பட்டது அல்ல. அருளாளர்கள் அருளிய பொருள்சேர் புகழேயாம். என்னெனில், மெய்யறிவும், மெய்யன்பும் உடையாராகலின் இவர்களிடம் மறந்தும் பொய்ப்புகழ் வாராது என்க.


சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும். எனவேதான் தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே என்று இறைவனைப் பாடினார் அப்பர் பெருமான்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
-திருக்குறள்(பொய்யாமொழி/பொய்யாவேதம்)-

உடம்பின் இயல்பை அறிந்து, இல்லறத்தைச் செம்மையாக நடத்தியும், விருந்தை உபசரித்தும், பசித்தோற்கு பசியாற்றியும் மற்றும் அறப்பணிகளைச் செய்து வந்தால், தலைவனாகிய இறைவனைத் தேடி நாம் போகவேண்டியதில்லை. தலைவன் நம்மை நோக்கி வருவான்.

5 comments:

  1. Congratulations! very good initiatives..keep it up the spirit.

    Anpudan,
    N

    ReplyDelete
  2. அருமை!
    வள்ளலார் பாடலுக்கு நன்றி

    ReplyDelete
  3. well done continue

    ReplyDelete
  4. தங்கள் வலைப்பூவை ஒரு மாதமாக சுவைக்கும் பேறு கிட்டவில்லை. இணையத்தை போதியளவு நேரம் பயன்படுத்த முடியாமல் போனமையே காரணம்.

    அன்பே சிவம் என்பதை மெய்யறிவுடன் சம்பந்தம் செய்து மெய்யின்பமாம் பேரின்பத்துக்கு விடைகொடுத்துள்ளீர்கள். அருமையாகவுள்ளது. வாழ்த்துகள்.

    திருமந்திர எடுத்துக்காட்டுகள் அற்புதமானவை.
    இரண்டாவது திருமந்திரப் பாடல்; உண்பதுக்கு முன்னர் இறைவனுக்குப் பச்சிலை கொண்டு பூசித்தல்,பசுவுக்கு ஒருவாயளவு புல் கொடுத்தல்,உண்பதற்கு முன் சிறிதளவு பிறர்க்கு கொடுத்தல்,பிறர் மனம் நோகாதவாறு இனிமையாகப் பேசுதல் என்பன யாவர்க்கும் ஏற்ற எளிமையான அறங்கள் என்பதை உணர்த்துகின்றது. இப்பாடலில்; உண்ணுவதற்கு முன்னர் இறைவனுக்கு பச்சிலை கொண்டு பூசித்தல் தவிர ஏனையவை ஏனைய உயிர்களுக்கு உணவளிப்பதை வலியுறுத்துகின்றது.முதலாவது பாடல்வரி உண்ண உணவு தந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் பண்பை குறிப்பிடுகின்றது. இறைவனுக்கு நன்றியுடன் வாழப் பழகும்போது உண்மை அன்பு உள்ளத்தில் குடிகொண்டுவிடும். குடிகொண்ட அன்பு, ஏனையவற்றை தானே இயக்கும்.

    பொய்யாவேதம் என எழுதும்போது தாங்கள் தவறுதலாக "பெய்" என எழுதிவிட்டீர்கள். தமிழ் யூனிகோட் எழுத்துமுறையில் இத்தகு பிழைகள் ஏற்பட வாய்ப்பிருப்பது இயல்பு. பொய்யாமொழி என்பதே சாலச் சிறந்தது என நினைக்கிறேன். "வேதம்" என்னும்போது ஏலவே உண்மை என்பதை உணர்த்துகின்றது. வேதம் என்னும் சொல் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ( சமஸ்கிரதம்,பெலோரசியன்,இரசியன்,...) உண்மை என்னும் பொருளை பெலோரசியன் மொழியில் சுட்டுவதைக் கொண்டு இதை எளிமையாக உணரக்கூடியதாகவுள்ளது.

    தங்கள் வலைப்பூ சைவநீதியின் அருமையை தமிழ்ப்பாருக்கு புலனாக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. பின்னூட்டம் தந்து ஊக்கம் தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். தவறுகளை சுட்டிக்காட்டிய சகோதரர், சீரடியார் சிவத்தமிழோன் அவர்கட்கு அன்புகலந்த நன்றிகள். தொடர்ந்து தாங்கள் இந்த வலைப்பூவிற்கு வந்து எங்கள் முயற்சிக்கு ஊக்கம் தந்துதவ வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் அனைவர்க்கும் நன்றிகள்.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.