Saturday, 26 September 2009

சரஸ்வதி பூசை

ஆக்கம்: ஜெயபாரதி (மலேசியா)

நவராத்தி - சரஸ்வதி பூசை

தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கிவரும் தெய்வங்களில் நாமகள், கலைமகளாகிய சரஸ்வதியும் விளங்குகின்றாள்.



சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மன்னர்களைவிட புலவர்களின் செல்வாக்கே ஓங்கியிருந்த்தது. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட அவர்களுக்கு செல்வாக்கு இல்லாவிடினும் கெளரவமாவது இருந்தது. தற்காலத்தில்தான் கற்றவர்களுக்குத் தமிழர்களிடையே மதிப்பு சா¢ந்துவிட்டது.

புலவர்களின் செல்வாக்காலும், கல்வியின் முக்கியத்துவத்தாலுமே நாமகளின் வழிபாடு சிறந்து விளங்கி பரவியது. வேறு தெய்வங்களை முழுமுதற்பொருளாக வணங்கி வந்த பெரும்புலவர்களும் கூட நாமகளைத்துதிக்கத் தவறவில்லை.

பெரும் விஷ்ணு பக்தராகிய கம்பரும், தீவிர சிவபக்தராகிய ஒட்டக்கூத்தரும் நாமகளை முழுமையாகப் பெற்றவர்கள். அடிக்கடி கலைமகளை நேரடியாகப் பார்க்கும் பேறு அவர்களுக்குக் கிட்டியது. ஆதி சங்கரா¢ன் பேராற்றலை மூன்றுமுறை கலைமகளே நோ¢ல் வந்து பா¢சோதித்திருக்கிறாள். அவரும் சர்வக்ஞபீடம் ஏறமுடிந்தது.

கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. சமண காப்பியமாகிய சீவகசிந்தாமணியில்கூட "நாமகள் இலம்பகம்" என்றொரு அத்தியாயம் உள்ளது.

கம்பனின் "சரஸ்வதி அந்தாதி"யும், ஒட்டக்கூத்தரின் "ஈட்டி எழுபது"ம் குமரகுருபரின் "சகல கலாவல்லி மாலை"யும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

நாமகளின் பேரருளுக்குப் பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.

பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர். சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரைத் திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாகப் பொழிந்தார். முதற்பாட்டு முருகனின்
போ¢ல் பாடிய "கந்தர் கலிவெண்பா".

அன்றிலிருந்துதான் அவருக்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.

திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னிதியில் "மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்" பாடினார்.

அதை மன்னர் திருமலை நாயக்கா¢ன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் "தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே" என்னும் பாடலின்போது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.

பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும் அதன்பிறகு பாரதநாட்டின் இதரபகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.

அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமேஇல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
ஆகவே காசியில் ஒரு மடத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்தார்.

அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷா ஜஹான் இருந்தார். அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்தமகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார். அவரைக் காணச் சென்றார் குருபரர்.

சித்தராகிய குருபரர் போகும்போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார்.
நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்குத் தெரியாது.

ஆகவே சரஸ்வதியைத் தியானித்து "சகல கலாவல்லி மாலை" எனும் பாடலைப்
பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல்
ஏற்பட்டது.

இவ்வகை சித்தியை "Gift of Tongues" என்று கூறுவார்கள். இக்காலத்தில் கூட சில கிருஸ்தவ சமயபோதனையாளர்களுக்கு இறையருளால் வேற்றுமொழியறிவு ஏற்படும். மற்ற சமயங்களில் சாதாரணமாகத்தானிருப்பார்கள். நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாகஉரையாடித் தம் வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்.

மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் ழங்கினார். அன்றிலிருந்து குமரகுருபரா¢ன் மடத்தைக் "காசிமடம்" என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளைக் "காசிவாசி" என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
எளிமையாகக் கலைமகளை வழிபடுவது எப்படி?

சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சிக்கலான பூஜை முறைகளும் சமஸ்கிருதமந்திரங்களும் தோத்திரங்களும்தான் இருக்கின்றன.
ஆள்வைத்துச் செய்வது என்பது சிரமம் அல்லவா?

ஆகவே,

சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றிவைத்து, முன்னால் ஒரு வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மீது புத்தகங்கள், எழுதுகருவிகள், மற்றபடிக்கு ஸ்டெதாஸ்கோப்பு போன்ற தொழிலுக்குரிய சாதனங்கள், ஆகியவற்றை வைக்கவேண்டும். ஏதாவது பலகாரங்கள், சுண்டல் போன்றவை யதேஷ்டம். ஊதுபத்தி. சாம்பிராணி. மலர்கள். கற்பூற தீபம். வெற்றிலைபாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி என்று கிடைப்பதை வைக்கலாம். கிடைத்தால் சா¢. ஓஸ்லோ போன்ற இடங்களில் இதற்கெல்லாம் எங்கு போவதாம்?

கணினி, பெரிய கருவிகள், வாகனங்கள் போன்றவற்றை ஆங்காங்கு விட்டுவைக்கலாம்.

முக்கியமாக "சகல கலா வல்லி மாலை"யைப் படித்துப் பூஜை செய்யலாம்.

அதற்குமுன் புத்தகபீடத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யவேண்டும்.

என்னமோ, ஏதோ என்று பயந்துவிடக்கூடாது. ஒன்றுமில்லை. முழுமனத்துடன் கலைமகளை நினைத்து அந்த பீடத்தில் இருப்பதாக வேண்டிக்கொள்ளவதுதான் அது. தமிழிலோ தெலுங்கிலோ எம்மொழியிலும் நினைக்கலாம். சரஸ்வதிக்கு இந்த மொழிகளெல்லாம் நிச்சயம் தொ¢யும்.

சகலகலாவல்லிமாலையைச் சொல்லமுடியாவிட்டலும் கவலையுறவேண்டாம்.

நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!

அடுத்து "சகல கலாவல்லி மாலை".....

அன்புடன்
ஜெயபாரதி

1 comment:

  1. உமாமகேஸ்வரி கன்னியப்பன்19 September 2010 at 22:25

    நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இரூக்கின்றன.
    மிக்க நன்றி
    இந்திய மக்கள் அனைவரும் பயன் பெறுவாராக.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.