தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று
கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி
நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி
நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
-மகான் கொங்கண மகரிஷி 12-
மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம் :
மனிதன் எண்ணிலடங்கா பிறவிகள் எடுத்துள்ளான். ஆறுகளில் உள்ள மணல்களை எண்ணி கணக்கிட்டாலும், நமது பிறவியை கணக்கெடுக்க முடியாது. இத்தனை பிறவிகளிலும் காமத்தாலும், பொருள் வெறியாலும், ஜாதி வெறியாலும், மத வெறியாலும், நான் என்ற கர்வத்தாலும், தனக்குள்ள ஆள்படையாலும், கல்வி கற்றோம் என்ற கர்வத்தாலும், உத்யோக பெருமிதத்தாலும் அடாது பாவங்கள் செய்திருப்போம். இந்த பாவங்கள்தான் அறிவை மங்க செய்துவிடும். அதன் காரணமாக பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர முடியாது. அப்படியே அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொன்னாலும் நமது பாவத்தின் காரணமாக உணர முடியாது. மூர்க்கத்தனமே மிஞ்சி இருக்கும். இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் பல ஜென்மங்களில் செய்திருந்தாலும், ஆசான் அகத்தீசன் திருவடியை நம்பி தொடர்ந்து பூஜை செய்து வந்தால் பாவம் எது? புண்ணியம் எது? என்று உணர்த்துவார்கள்.
ஒரு மனிதன் பாவியாவதற்கு காரணம், மனைவியினுடைய இயல்பை அறியாமல் அவள்மீது சந்தேகப்படுதலும், அடிமைபோல் எண்ணி அடித்தலும், கொடுமையாக பேசுதலும், மேலும், கல்வி அறிவு இருப்பதால் உடன் பிறந்தவர்களின் சொத்தை அபகரித்தலும், மேலும் தாய் தந்தை நமக்கு செய்த உதவிகளை நன்றி மறந்துவிடுவதும், மேலும் நம்மிடம் வேலை செய்கிறவர்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமையும், பொருள் சேர்க்கும் பொழுது மற்றவர்கள் சொத்தை அபகரித்து கொள்ள வேண்டும் என்ற அறியாமையும்தான் பாவம் சேர்வதற்கு காரணங்கள் ஆகும். மேற்கண்ட பாவங்களைப் பற்றி ஆசான் அகத்தீசர் உணர்த்தியும், மேலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதற்குரிய பரிபக்குவத்தையும் ஆசான் நமக்கு அருள்செய்வார்.
மேலும், உடம்புதான் ஞானவீடு என்றும், இந்த உடம்பாகிய வீட்டை அறிந்து வீட்டை உறுதிபடுத்தி கொள்ளவும் ஆசான் அகத்தீசர் உபதேசிப்பார். அவர் உபதேசித்தபின் இந்த உடம்பில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே அமைந்துள்ளது என்பதை உணர முடியும். மேலும், பாவமாகிய மும்மல தேகத்தை நீத்து புண்ணியமாகிய ஒளி உடம்பு பெற அருள்செய்வார். புண்ணிய உடம்பு பெறுவதற்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய இயல்பை அறிந்து சுழிமுனையில் வாசி செலுத்தினால் அது ஓங்கார ரீங்காரமாக ஓசை உண்டுபண்ணி தசநாதமாக பின்பு விரிவடையும். மேலும், அமிழ்தமும் சிந்தும், ஜோதியும் தோன்றும். ஆசானே நம்முன் தோன்றி அருள்செய்வார். அதுமட்டுமல்ல கோபத்தால்தான் பல பிறவிகளில் பாவம் வந்தது என்று அறிந்து அந்த கோபத்தின் முனையையும் மழுங்கச்செய்துவிடுவார். அதுமட்டுமல்ல ஆசைதான் பிறவிக்கு காரணம் என்பதை அறிந்து மூலக்கனலை எழுப்பச் செய்து அந்த ஆசைகளை வேரோடு எரித்துவிடுவார். மேலும், கொடூரமான எண்ணங்கள் நீங்கி சாந்தம் உண்டாகும்.எனவே, ஆசான் அகத்தீசரை தினமும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து வந்தால் முன்செய்த பாவங்களும் தீரும். ஊனாகிய உடம்பைப்பற்றி அறிகின்ற அறிவும் வரும். சுழிமுனைiயாகிய இரகசியமும் தெரியும். சிவவடிவாக உள்ள அகத்தீசன் நம்முன் தோன்றி காட்சி தருவார். மூர்க்கத்தனம் நீங்கி சாந்தம் உண்டாகும். இதுவ மேற்கண்ட பாடலின் சாரமாகும்.
Tuesday, 20 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
i like this sentence very deep and spirituel
ReplyDeletewhere can we think some other sentence
thanks
Bala