Sunday, 3 January 2010

தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி

- ச. சுவாமிநாதன் -

இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.

இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். இறைவனை வருணிக்க வந்த உபநிஷத் “அணுவோர் அணீயாம் மஹதோர் மஹீயாம்” என்று (அணுவுக்கும் சிறியவன் , பிரமாண்டமான மலைக்கும் பெரியவன்) கூறுகிறது. எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.

அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர். இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு கடுகில் 2,62,144 அணு!

ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127

ஐம்பது ண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.


திருமூலர் கணக்கு

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974
(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)

நன்றி : செய்தி மடல், இலண்டன் சத்சங்கம்

.

3 comments:

 1. தமிழர் கண்ட விஞ்ஞானமே மெஞ்ஞானம் என்று சொல்லலாம்.

  மேற்குலகு கண்ட விஞ்ஞானத்துக்கும் உலக மெஞ்ஞானத்துக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில்; கட்டுப்பாட்டுப் பரிசோதனை விஞ்ஞானத்தில் உண்டு. மெஞ்ஞானத்தில் இல்லை. காரணம் பரிசோதனை செய்து பிறருக்கு நிருபித்தால் அதை பிழையான வழியில் பிழையானவர் பயன்படுத்த விளைவர் என்பதனால். எனவே, பரிசோதனை செய்து நிருபித்தலை மெஞ்ஞானத்தில் வெளிப்படையாகக் காணமுடியாது. அவரவர் தாம் அனுபவரீதியில் உணர்ந்து ஒழுகுவது மெஞ்ஞானம். அதுதான் உண்மை ஞானமுமாகும். தமிழர் கண்ட விஞ்ஞானமே சைவ சித்தாந்த ஞானம் எனலாம். ஆனால் ஒரு இனத்துக்கு உரிய ஞானமல்ல அது. உலகுக்குரிய ஞானம்.

  இனம்,மொழி,மதங்களுக்குள் அகப்படாத ஞானத்தை தென்னாட்டில் சைவ சித்தாந்த வாழ்வாக கண்டு மெய்யறிவு பெற்று இறைவாழ்வு பெற்றனர்.

  தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டு மெஞ்ஞானம் எந்நாட்டுக்குமுரிய மெஞ்ஞானம் என்பதை மாணிக்கவாசகர் உணர்த்தியுள்ளார்.

  பயனுள்ள கட்டுரைகளை பதிவேற்றியுள்ளீர்கள். இணையத்தினூடாக பலருக்கு இக்கட்டுரை சென்றிருக்கும்.எம் தமிழ் மூதாதையரின் விஞ்ஞான அறிவை உணர்த்தியிருக்கும்.

  குறித்த கட்டுரையின் எழுத்தாளருக்கும் பதிவேற்றிய தங்களுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 2. அன்புடையீர்

  http://shivasevagan.blogspot.com

  ஆறுபத்துமூன்று நாயன்மார்கள் பற்றிய இணையதளம்

  ReplyDelete
 3. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/


  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.