இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம். எமக்காக உழைக்கும் உழவர், எருது, பசு மற்றும் ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்யாது நன்றியாக இருப்போம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு!
என்பது பொய்யாநெறி தந்த வள்ளுவன் வாக்கு.
எத்தகைய அறத்தை அழிப்பவனுக்கும் பாவத்தினின்று நீங்கும் வழியுண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவனுக்கு அதினின்று உய்யும் வழியில்லை என்பது வள்ளுவன் வாக்கு..
* ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்து பெற்றதாய்க்கு நன்றியாக இருப்பதே தமிழர்தம் நெறியாகட்டும்.
* எமையெல்லாம் ஆளாக்கிய தந்தைக்கு நன்றியாக இருப்போம்.
* நல்லதைத் தந்து எம் கழிவுகளை மட்டும் நாளும் ஏற்று சமநிலை பேணும் இயற்கைத் தாய்க்கு நன்றியாக இருப்போம்.
* எமக்காக உழைக்கும் உழவர், எருது, பசு மற்றும் ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்யாது நன்றியாக இருப்போம்.
அத்தகைய பெருமைக்குறிய ஆற்றவேண்டிய நன்றிக்கடமையை விட்டுவிட்டு மாண்டபின் திவசம் கொடுப்பது, கொடை கொடுப்பது, குண்டூசி கொடுப்பது என்பதெல்லாம் வீண்.
அகிலப் பற்றையெல்லாம் அகற்றிய துறவியாலும் அன்னைப் பற்றை அகற்றிவிடமுடியுமா? கடவுளுக்கு நேரானவள் அல்லவா அவள்! பெற்ற அன்னையையும் காக்கும் இயற்கை அன்னையையும் தொழுவது ஆண்டவனைத் தொழுதற்கு நேரல்லவா?
முற்றும் துறந்த நிலையில் கூட பட்டினத்தார் தன் தாயின் இறப்பை அறிந்து ஆற்றாது கண்ணீர் விட்டு வருமாறு பாடுகிறார் :
ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
என்று பாடல்கள் செய்து தன் துயரத்தை வெளிப்படுத்துகிறார் என்றால் தாயின் சிறப்பை என்னவென்று கூறுவது!
ஐயிரண்டு திங்களா அங்கமெல்லாம் நொந்துபெற்ற தாயும், காலமெல்லாம் அனைவரையும் சுமக்கும் இயற்கைத் தாய்க்கும் தைத்திருநாளில் மட்டுமன்றி என்றும் நன்றியுடன் இருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.