சித்தர்கள் அருளிய இருள், மருள், தெருள், அருள்.
பகதி 2
அடுத்து மக்கள் மனத்தெளிவு பெற வேண்டி, ஞானமடைந்த மகான்கள் அளிக்கும் ஆசனம், யோகம், ஞானப்பயிற்சி வழிகள். வயிற்றுப்பசிக்கே வழி காணமுடியாத வறுமையாளருக்கு இந்த வழி பெரிதாக உதவி செய்யாது. பசியை வென்றோர்கே இது பொருந்தும். அதனால்தான் வள்ளலார் போன்ற மகான்கள் முதலில் வயிற்றுப் பசிக்கு உணவிடும் அன்னதானத்தை முதன்மையாகச் செய்தனர்.
சோனியாகாந்தியை உங்களுக்குத் தெரியும் என்பதில் எந்த சிறப்பும் இல்லை. எந்தப் பலனும் இல்லை. ஆனால் சோனியா காந்திக்கு உங்களைத் தெரியும் என்பது சிறப்புநிலை. எல்லோருக்கும் கிடைக்கும் பொதுப்பலன்களை விட உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சிறப்புப் பலன்களை அடையலாம். நியதிக்கு, சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட சிறப்புப் பலன்களையும் அடையலாம்.
அதேபோல் இறைஆற்றல் இவ்வுலகில் எல்லா உயிர்க்கும் பொதுவான பலன்களைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பவனுக்கும் அதேதான், இல்லை என்பவருக்கும் அதேதான்.
உடலை உயிர் இயக்குகிறது. பசித்தால் உண்ணுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். காற்றை சுவாசிக்கிறோம். இவையெல்லாம் இறையாற்றலால் கிடைக்கும் பொதுப்பலன்கள். ஆனால் இறையாற்றலோடு தனிப்பட்ட முறையில் உங்கள் ஆன்மா தொடர்பு கொள்வது என்பது சிறப்புநிலை. இதை ஞானம் பெற்றவர்கள் அடைகிறார்கள். அறிவுத் தெளிவு பெற்றவர்கள் அடைகிறார்கள்.இதை அடைந்தவர்கள் உண்டும் வாழலாம், உண்ணாமலும் வாழலாம், தூயநீர் குடித்தும் வாழலாம், சாக்கடை நீர் குடித்தும் வாழலாம். விதியை மதியால் வெல்லலாம். உலகநியதிகளை மீறி அவர்களால் வாழ முடியும். இந்நிலையே ’தெருள்’ .
இயம நியம் ஆசன பிராணாயாமம் போன்ற யோக முயற்சிகளின் வழியே தெருள் எனப்படும் தெளிவு பெறும்போது அறிவுடையோர் பட்டியலில் முதன்முதலில் இடம பிடிக்கிறோம்.
இறுதியில் பெற வேண்டியது அருள். தெளிவு பெற்றவுடன் இந்த அருள் கிடைத்து விடாது. தெளிவு பெற வேண்டிப் பாடுபட்டு தேடிய அத்தனை தத்துவங்களையும் குப்பைபோல் தூக்கி எறிந்துவிட்டு. உடல், பொருள், ஆவி என்னும் அத்தனை அம்சங்களையும் இறையாற்றலிடம் ஒப்புக்கொடுத்தால்/சரணடைந்தால் அருளைப்பெறலாம். இதைத்தான் தத்துவ நிக்கிரகம் என்பார் வள்ளல் பெருமான்.
இந்த அருள்நிலையைப் பெற்றவன் இறைவனைத்தவிர யாருக்கும் அடிபணிய வேண்டியதில்ல்லை. அதனால்தான் ’துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்று கூறும் வழக்கம் வநதது. இந்த அருளைப்பெற்ற திருநாவுக்கரசர் ’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.. !’ என முழக்கமிட்டார்.
இந்த அருள்வழி ஒன்றுதான் இறைவனை அடைவதற்குரிய வழி. மற்ற வழிகளில் இறையருளை அடையலாம் எனக்கூறுவதும், அடைந்ததாக பிதற்றுவதும் வெறும் கூச்சல்களே.
இதைத்தான் திருவள்ளுவர்
’நல்லாற்றால் நாடி அருள் ஆள்க பல்லாற்றால்
தேறினும் அஃதே துணை’ 242
எந்த மார்க்கத்தின் வழியாக இறையாற்றலை நோக்கிப் பயணித்தாலும், இறுதியில் அருள் மார்க்கத்தில் நுழைந்துதான் இறைவனை அடையமுடியும்.
தெளிவு பெறுவோம். இறையருள் அடைவோம். எல்லாம் இன்பமயமாகட்டும்.
பகதி 1
http://cyber-mvk.blogspot.com/2010/06/blog-post_17.html
நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002
http://arivhedeivam.blogspot.com/2010/06/blog-post_10.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.