Saturday 5 June 2010

ஞானிகள் அருளிய அருட்கவிகள்

அகத்தியர் துணை

நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
.................நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
.................கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
.................தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
.................சிந்தையுணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.



மேற்கண்ட கவியின் சாரம் :

ஆசான் நந்தீசர், மகான் அகத்தீசர், திருமூலதேவர், மகான் புண்ணாக்கீசர், பிரம்மமுனிவர், புலத்தீசர், ஆசான் பூனைக்கண்ணார், மகான் இடைக்காடர், ஜோதி ரிஷியாகிய போகர், மகான் புலிப்பாணி சித்தர், அருள்மிகு கருவூரார், வினை தீர்க்கும் கொங்கண மகரிஷி, மகான் காலாங்கிநாதர், அழுகண்ண மகரிஷி, அகத்தின் இயல்பை அறிந்த அகப்பைச் சித்தர், பக்குவமுடைய பாம்பாட்டி சித்தர், தெளிவுமிகு தேரைய மகரிஷி, குணம் மிகுந்த குதம்பைச் சித்தர், தேகமென்னும் சட்டை நீக்கிய சட்டை முனிவர் மேற்கண்ட முத்தமிழ் வித்தகர்களாகிய பதினெட்டு சித்தர்களும் மகா அருள் வல்லவர்கள் ஆவார்கள். அவர்களை தினமும் வரிசைப்படுத்தி நாமஜெபம் செய்து வந்தால் பலபிறவிகளில் "யான்" என்ற கர்வத்தாலும், பொருள் வளமென்னும் செருக்காலும், ஆள்படை அகந்தையாலும் மற்றும் உத்யோக திமிராலும், பொல்லாத காமதேகத்தின் கொடுமையாலும், கொடிய சினத்தாலும் மேலும் புலால் உண்ணுதல், உயிர்க்கொலை செய்தல் போன்ற கொடிய பாவத்தாலும் வந்த கேடுகள் அத்தனையும், மேற்கண்ட ஞானிகளின் நாமத்தை சொல்லி வந்தால் பாவங்கள் எல்லாம் பொடிப்பொடியாகிவிடும்.

மேலும் சிறப்பறிவு உண்டாகும். "நாம் யார்?" "நமது பிறவி என்ன?" "நமது பிறவியின் தன்மை என்ன?" "இந்த பிறப்பால் அடையக்கூடிய லாபநஷ்டமென்ன?" என்பதை அறிய முடியும். நஷ்டத்தை நீக்கி ஆன்ம லாபம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு அறியாமைதான் காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆன்ம இயக்கமும், அதை தாங்குகின்ற உடம்பு பற்றியும், அந்த உடம்பால் வருகின்ற நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). ஆகவே, மேற்கண்ட பதினெட்டு மகான்களை உருகி தியானம் செய்தால், நாம் ஜென்மத்தை கடைத்தேற்றிக்கொள்ளலாம். எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

No comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.