Thursday, 24 December 2009

தமிழ் மூவாயிரமருளிய திருமூலர்





"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே"



மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து, ஆண்டொன்றிற்கு ஒரு பாடலாக, தான் பெற்ற இன்பம் இவ்வுலகும் பெற மூவாயிரம் திருப்பாடல்களை தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரமாக மகான் திருமூலர் அருளிச்செய்தார்.





"அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. "
-திருமந்திரம் (திருமூலர்)-

திருத்தொண்டர் திருவந்தாதி

``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`
-தி.7 ப.35 பா.5

என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.
-தி.11 ப.33 பா.36

எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார்.

``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.


திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.

திருத்தொண்டர் புராணத்தில்

அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.


தென்னாடு வருகை

திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.


சாத்தனூரில்


தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.


திருமூலராதல்


ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா`` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.


ஊரவர் உண்மை உணர்தல்

அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ``என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்`` என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார்.

தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திருவாவடுதுறையில் சிவயோகம்

சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

திருமந்திரம் அருளிச் செய்தல்

இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,


ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2

என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.


இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.


திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,


நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6

எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

சிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர் என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர் என்பதும்,


``அரிய தெனக்கில்லை அட்டமாசித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626

எனவும்


நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்
நந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7

எனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது` எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது? ஒரு பயனையுந் தாராது என அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்` (தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.

திருவருட் செயல்

இவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன் என்னும் ஆயனுடம்பிற் புகச்செய்தருளிய இப்படைப்புத் தொழில், அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப் புனைந்து போற்றுதற்கேற்ற நலந்தரும் வாழ் வினை நல்கியதென வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும் சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை ``எனது முன்னைத் தவத்தின் பயனாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்ல படைப்பு இதுவாகும்`` எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,


பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20

எனவரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்.

ஆவடுதுறையில் அருள்யோகம்

மூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால் தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,


சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18

எனவும்,

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19

எனவும்,

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில் `நந்திநகர்` என்றது திருவாவடு துறையினை.

திருமந்திரமாலை என்னும் பெயர்

சிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு அம்முதல்வன் அருளிய சிவாகமப் பொருளை விரித்துரைக்க எண்ணிய திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும்,

நந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்
அந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12

எனவும்,

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.


திருக்கூத்துத் தரிசனம்

திருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம் பெற்றவர்களாகச் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தரிசனம் கண்ட பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர் என்பது உய்த்துணரப்படும். திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்டு இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி,

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13

எனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.

திருமூலர் மரபு

இவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன் காரணம், இறைவனுடன் பிறப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத் தம் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனாபதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14

எனவும்,

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16

எனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.

திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது. இச்செய்தி,

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8

எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும்.

திருமூலர் பெருமை

மூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,

நந்தி யருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி யருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29

என வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.

தமிழ் முனிவர்

தமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப் புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத் தலையும், வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.


திருமந்திரம் அருளிய காலம்


இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,

``ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13

எனவும்

``இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி`` -தி.10 பா.19

எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்

பதினெண் மொழிகள்

திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந் நாட்டின் தாய்மொழியாகிய தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது,

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்
கண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10 பா.111

எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும்.

ஐந்து தமிழ் மண்டலம்

இவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.

சங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, ``தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்`` (தி.10 பா.1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.

தமிழ் நாடு மேற்குறித்த ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும்.

தில்லையிற் கூத்தப் பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர்.

எனவே அவ் வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.

திருமூல நாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.

தொல்காப்பிய உரை

தொல்காப்பியம் புறத்திணையியல் 20 - ஆம் சூத்திர உரையில், ``யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்`` என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்தமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

Sunday, 13 December 2009

கடவுளைக் கல்லாக்கிய கயவனே



ஓ! மனிதா!!!

கடவுளைக் கல்லாக்கிய கயவனே
பிள்ளையை வாட விடும் மூர்க்கனே
ஆத்மா இருக்குமிடம் ஆலயமன்றோ
தானம் தவத்தை விட உயரந்ததன்றோ
பாலும் தேனும் உயிரற்ற கல்லுக்கு
பாலகனான உயிருள்ள கடவுளோ பட்டினியில்
கங்கையிலே மூழ்கிப் புண்ணியமில்லை
கால் வலிக்க தலம் சுற்றியும் புண்ணியமில்லை
பசியாற்றுதலே சிறந்த இறைத்தொண்டு
பசிப்பிணி நீக்குவிர் புண்ணியம் பெறவே
அன்புதான் சிவம் கருணைதான் இறை
இவன் வயிற்றை இன்றே நிறை
பசியாறறுவீர் மானுட தர்மம் காப்பீர்.

-சூர்யா-

Saturday, 5 December 2009

ஆறுமுக நாவலர்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர், யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்த அருட்பணி சாலச் சிறந்தது. ஆனால் மூடத்தனத்தையும் சாதிய வேற்றுமையைக் களைய விளைந்த அருலாளரை மூர்க்கமாக எதிர்த்த அடிப்படைவாதி. இந்த அடிப்படைவாதமே நாவலரால் திருவள்ளுவரையும் அருலாளர் என ஏற்கமுடியாது போனது. சாதி, மதம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வேறுபட்டு மனிதநேயம், ஆன்மநேயம் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு மனிதனை மனிதனாக மட்டும் வாழச்சொல்லாமல் அவனை கடவுள் நிலை அடைவதற்கும் வழிகாட்டுகிறது சைவசித்தாந்தம். மேலும் மனிதன் இயற்கையின் படைப்பு என்ற உண்மையையும் மனம், உடல், ஆன்மா என்ற ஆழமான மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி உலகிற்கு உண்மை ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே அருட்சோதி வள்ளல் இராமலிங்கசுவாமிகள். சைவநெறி அன்புநெறி. மூர்க்கர்கள் கருத்தை அப்படியே உள்வாங்குவது தவறு. நாவலரும் தன் அடிப்படை வாதத்திற்கு எதிரானவரை மூர்க்கமாக எதிர்த்தார். இவரைவிட பாரதியார் எவ்வளவோ மேல் என்பதே சிறியோனின் கருத்து.(முருகவேல் - பின்னூட்டம்)


சாதிப்பிரசாரம்

"தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது"- ஆறுமுக நாவலர்

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.

இவர் போன்றவரின் சைவத்திற்கு முரணான வைதீக சாதிய மூர்க்கத்தனத்தால் பல தமிழர் வேற்றுமதத்தைத் தழுவினர். பலர் தமிழர் என்ற அடையாளங்களை இழந்தனர். இவற்றிற்கு காரணமான இவர் போன்றோரின் சைவசித்தாந்த விரோத, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.

போலியருட்பா மறுப்பு

மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

தோற்றம்

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.


கல்வி

ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத்(Bible) தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.


சமயப் பணி

சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.

வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.

அச்சுப் பணி

சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.

தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.


தமிழகப் பணி

இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.

1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.

குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.

1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

சைவப் பாடசாலை நிறுவல்

1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

இறுதி நாட்கள்

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

*குருபூசைத் தினம்: கார்த்திகை மகம்

வெளி இணைப்புக்கள்
ஆறுமுக நாவலரின் நூல்கள் (நூலகம் திட்டம்)

இலக்கணச் சுருக்கம்
சைவ வினாவிடை முதற்புத்தகம்
பால பாடம் - முதற் புத்தகம்

ஆறுமுக நாவலர் பற்றிய நூல்கள்
நாவலர் - நூலகம் திட்டம்

பிற இணையத்தளங்கள்
ஆறுமுக நாவலர் இணையத்தளம்
ஆறுமுகநாவலர் குருபூசை-2007
Graves of Peter Percival, R B Foote, discovered at Yercaud - (ஆங்கிலத்தில்)
Percival was not an apostate - Prof. Hoole - (ஆங்கிலத்தில்)

அடிக்குறிப்புகள்
நாவலரின் சைவ வினாவிடை முதற்புத்தகம்

Friday, 4 December 2009

மானிட உடம்பைப் பெற்ற பயன்

உடம்பைப் பெற்ற பயன்
-ஆசான் ஒளவையார்-

உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்"

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே

உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.
அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,

""பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே

நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்

ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்
எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள்

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.


"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்

மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.

Master Avvaiyar : Greatest Thamil woman, humanitarian, a saint & a master(siddhar) ever lived.

இராவணன் வணங்கிய தலம்

ஈழத்தமிழரின் தொன்மை வரலாற்று எச்சங்கள்

பழம் பெருமை மிக்க திருக்கோணேசுவரம்

திருக்கோணேசுவரம்

லேனா தமிழ்வாணன்

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள் - மேலும் அறிய இங்கே அழுத்தவும்


பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.








மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே’’
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,

‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோணமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே!’’
எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,

‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ என்றும்,
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,

‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,

‘‘நிறைக்காட்டானே நெஞ்சத்தானே....’’

என்று தொடங்கும் பாடலில்,

‘‘…திருமாந்துறையாய் மா கோணத்தானே....’’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.

(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங் கி
(க ) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச ) ன யி ய ற (று )
(செ ) த வை த
(ண ) ணா
க ள

இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்.’’

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்.’’

இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,

‘‘….மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’
என்றும்,

யாழ்ப்பாண வைபவ மாலையில்,

‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால் தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது?

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால் ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.

திருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.

இதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றையும், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.

தினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன? பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக் கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப் பழங்கள் எங்கும் விழுந்து பரவிக் காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.

இறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு இவ்வாலயத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.

Thursday, 3 December 2009

பகுத்தறியுமின் பகுத்தறிவைப் பகுப்பின்றி!

ஆக்கம்:
-சூர்யா-


பகுத்தல் 1

இன்று பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் பகுத்தறிந்து எதையும் கூறுகிறார்களா என்று பகுத்தறிய எனக்குப் பகுத்தறிவு உண்டா என என் பகுத்தறிவை நானே பகுத்தறிவதற்கு எனக்குப் போதுமான பகுத்தறிவு இருக்கா? இல்லையா? என்பதை யாமறியோம்.

கடவுள் மறுப்பு, சாதி பேதமற்ற சமூகம், யாவரையும் சமமாக பார்க்கும் எண்ணங்களே ஆரம்பகால தமிழ்நாடு, ஈழத்துத் தமிழ்ப் பகுத்தறிவாளர்களின் கருப்பொருட்களாக இருந்துள்ளன. இவை எவற்றிலும் குறையில்லை, குற்றமுமில்லை என்றே அடியேனின் பகுத்தறிவு பகுத்து என் உளமுள் புகுத்துகின்றது. ஆனால், இந்தப் பகுத்தறிவாளர்கள் தாம் பகுத்த பகுப்பை பற்றிப் பிடித்து தான், தன் குடும்பம், தான் சார்ந்த சமூகம் கடைப்பிடிக்க எவ்வளவிற்கு முயன்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியது? இந்தப் பகுத்தறிவு தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய நன்மை, தீமைகள் எவை?

அந்தக் கேள்விகளை உங்கள் பகுத்தறிவிற்கு விட்டு இந்தப் பகுத்தலை முடித்து மிக விரைவில் இன்னுமோர் பகுப்பில் சந்திக்கிறேன். நன்றி!

-பகுத்தல் 1 முற்று-
பகத்தறிந்து தொடர்ந்து பகுப்போம்...... பதிவு தொடரும்...

அறிந்திட
மனித நேய மாண்பாளர் வள்ளலார்

Tuesday, 1 December 2009

காயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்

காயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்