Thursday 26 August 2010

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.


"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!


என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.

-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.

-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.



1 comment:

  1. i m really happy and getting peace after reading your article.thanks anbe Shivam.

    ReplyDelete

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.