Sunday 29 November 2009

சன்மார்க்கம் ஏது? துன்மார்க்கம் ஏது?

சன்மார்க்கம் : 'சத்'து மார்க்கம் (சத்+மார்க்கம்=சன்மார்க்கம்) என்றும் அழியாதது.

இந்த 'சன்' எனும் பதத்தை இன்று பல முத்திநெறியறியாத முர்க்கர்கள் பயன்படுத்துவது வருந்தத்தக்கது.

இவர்கள் இந்தப்பதிகத்தினுள் அடக்கம்:

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)

துன்மார்க்கம் : 'அசத்'து மார்க்கம் - அழியக்கூடியது.

சத்-அசத் அறிவதே ஞானம்

ராஜரிசி, சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தம் திருவாய் மலர்ந்து அருளிய ஞான உபதேசங்கள்

விளக்கம் கீழே ஒலி வடிவத்தில்...




தவத்திரு ஊரன் அடிகளார் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீமுக வருடம் வைகாசி 9 பரணியில் (22.5.1933) அன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் தவத்திரு ஊரன் அடிகள் தோன்றினார். 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தமது இருபத் திரண்டாம் வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று தமது முப்பத்தைந்தாம் ஆண்டுத் தொடங்கிய அன்று, பின் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970ஆவது ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர். அன்னதானத் திட்டத்திற்கு இவர் வகுத்த திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்று, திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களுக்கு, (Fixed Deposit) மூலம், நல்ல நிதியினைப் பெற்றுத் தந்தது. அவர், சிறிதும், பெரிதுமாக நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் சில வருமாறு.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்

வ.எண்.நூலின் பெயர்முதற் பதிப்பு
1.வடலூர் வரலாறு1967
2. இராமலிங்கரும் தமிழும்1967
3.பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள்1969
4.புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார்1969
5. இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள்1969
6.இராமலிங்க அடிகள் வரலாறு (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)1971
7.வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களின் வரலாறு1972
8.இராமலிங்க அடிகளின் வரலாறு, கொள்கைகள், பாடல்கள்1973
9.இராமலிங்க அடிகள் – ஒரு கையேடு (இராமலிங்க அடிகள் சித்தி நூற்றாண்டு விழா மலர்)1974
10.வள்ளலார் மறைந்தது எப்படி ? (சாகாக்கலை ஆராய்ச்சி)1976
11.வள்ளலார் கண்ட முருகன்1978
12. வள்ளலார் வாக்கில் ஓங்காரமும் பஞ்சாக்கரமும்1979
13. வள்ளுவரும் வள்ளலாரும்1980
14. வடலூர் ஓர் அறிமுகம்1982


பதிப்பித்தவை
1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள் – ச.மு. கந்தசாமி பிள்ளை1970
2.இரமலிங்க சுவாமிகள் சரிதம் (செய்யுள்) – பண்டிதை அசலாம்பிகை அம்மையார்1970
3. திரு அருட்பா ஆறு திருமுறைகளும் சேர்ந்தது1972
4.திரு அருட்பா (உரைநடைப்பகுதி)1978
5. திரு அருட்பாத் திரட்டு1982
6.வள்ளுவரும் வள்லலாரும் 2006
7.திருமூலரும் வள்ளலாரும்2006
8. சம்பந்தரும் வள்ளலாரும்2006
9. அப்பரும் வல்லாரும்2006
10.சுந்தரரும் வள்ளலாரும்2006
11.தாயுமானவரும் வள்ளலாரும்2006
12.வள்லலாரும் காந்தி அடிகளும்2006

திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்திய பெருமை இவருக்கே உரியது. திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்ப திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழகத்தின் பல்கலைக் கழகங்களாகிய அண்ணாமலை, சென்னை, அழகப்பா முதலியவைகளின் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளார்.

சைவ சித்தாந்த பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அன்பர்கள் அழைப்பை ஏற்றுச் சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்குகின்றார். தமிழகத்தின் அரசியல், வர்த்தகத் தொழில் பிரமுகர்களோரும், ஆன்மீக நிலையங்களின் தலைவர்களோடும் அடிகளார் மிக்க தொடர்புடையவர்.

அடிகளார், சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர். வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே என்பதை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Saturday 28 November 2009

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்

மீள்பதிவு

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.



கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.


எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.


பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.


இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!


அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."


அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:


"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."


நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.


விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)


இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)


செர்‎ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!


(நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2009)

Thursday 26 November 2009

திருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெரும் தமிழ்ச்சித்தர்.

வள்ளுவப் பெருமான் மும்மலமாகிய பாசதேகத்தை நீத்து ஒளிஉடம்பு பெற்றதால் உலகிலுள்ள எந்த மதத்தவராயினும், எந்த மொழியினராயினும், எந்த கலாச்சாரம் உடையவராயினும், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எந்த இனத்தைச்சார்ந்தவராயினும் வள்ளுவப்பெருமான் கடவுள் என்று அறிந்து வள்ளுவப்பெருமானே எனக்கு அருள் செய்யவேண்டுமென்று திருவடி பணிந்து அழைத்தால் அஞ்சேல் மகனே! என்று அருள்செய்யக் கூடிய வல்லமை அய்யன் வள்ளுவருக்குண்டு.


திருக்குறளை பார்த்தால் கடவுளை பார்த்ததாக அர்த்தம். திருக்குறளை தொட்டால் கடவுளின் திருவடிகளை தொட்டதாக அர்த்தம். திருக்குறளை படித்தால் கடவுளிடம் தொடர்பு கொண்டதாக அர்த்தம். திருக்குறள் படிப்பதை கேட்டால் கடவுளின் பெருமையை கேட்டதாக அர்த்தம். அதில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் தெளிவாக சொல்லியிருப்பதால் அதை பார்ப்பதும், தொடுவதும், படிப்பதும், படிக்க கேட்பதும் புண்ணிய செயல்களாகும். தெய்வத்தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் நமது பிள்ளைகளை தமிழை கற்க செய்ய வேண்டும். கற்றால் நமது பிள்ளைகள் கடவுள்தன்மை அடைவார்கள். எனவே, திருக்குறளை போற்றுவோம்! பூஜிப்போம்! வினைகள் நீங்கி வெற்றி பெறுவோம்!!

வருங்காலத்தில் உலகெங்கும் திருக்குறளை வேதமாக எண்ணிப் போற்றி வணங்கக்கூடிய காலமே ஞானச்சித்தர் காலமாகும். மேலும் ஞானத்தைப்பற்றி அறிந்துகொள்ளவும் இனி பிறவாமையாகிய இரகசியத்தை அறிந்துகொள்ளவும் விரும்புகிறவர்கள் அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.


(எ.கா)

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!

சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
சித்தர் தமிழே ஓங்கார விளக்கம் தரும்
சித்தர் தமிழே பிரணவ சூட்சுமம் விளக்கும்

தமிழே தலைவன் மொழி; சித்தன் மொழி
தமிழை அறிந்தால் சித்தனை அறியலாம்
தமிழை அறிந்தால் தலைவனை அறியலாம்
தமிழை அறிந்தால் உலகை அறியலாம்
தமிழை அறிந்தால் இயற்கையை அறியலாம்

தமிழை அறிந்தால் உன்னை அறியலாம்
தமிழை அறிந்தால் நீ சவமல்ல; நீயே சிவமென்பதை அறியலாம்

அறிவீர் இதனை இன்றே! செல்வீர் ஓங்காரக்குடில் நன்றே!


ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010
தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184










திருவள்ளுவர் Thiruvalluvar
Facebook Page

Facebook Group

Saturday 14 November 2009

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

“அருட்பெருஞ் சோதி; அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் சோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”


- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ஆன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.


நன்றி:
Vallalar.org

Monday 9 November 2009

அண்டத்திற்குள் பிண்டம் பிண்டத்திற்குள் அண்டம்

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!


அண்ட, பிண்ட விசாரம்


பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது. அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.


அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.


சிதம்பர இரகசியம்


“ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.”


ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் – ஆக 16 உயிர்ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை)பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது.தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13 உயிர்(· சேர்த்து)


“வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த விதழீராறாமங்குலத்தில்திட்டமிட்டவனாகதத்தில்
வீற்றிருந்த சிறந்தருளும் ருத்திரனுத்திரியைப்போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் திருநீறாயானவாறும்அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்பாத மைம்பத்தோரட்சரமுங் காப்புத்தானே.”(ஞானம் எட்டி)


“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலுமுதலான
சுவாதிட்டான மெழுத்தா றாகும்பத்திதரும் பூரகத்தி
லெழுத்தோ பத்துபாங்கான அநாகதத்தி லெழுத்தீ ராறாஞ்சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சுசார்வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”(ஞானம் எட்டி)

மூலாதாரம் …….. – 4
சுவாதிட்டானம்… – 6
மணிபூரகம் …….. -10
அநாகதம்……….. – 12
விசுத்தி………….. – 16
ஆக்கினை……….. – 2
அம்பரம்………….. – 1
*****************************
ஆக மொத்தம் ..-51
*****************************

இவையே சிதம்பர இரகசியம்.


ஐம்பத்தியொன்று ஐந்தானது.

‘ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே’


இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.


“அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்”எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.


கால்கள் – நகரம் – நடப்பு – நிலம் – உ – சிவப்பு -வயிறு – மகரம் – மறைப்பு – நீர் – எ – பச்சை -தோள் – சிகரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம் -வாய் – வகரம் – வனப்பு – விண் – ஒ – கறுப்பு -கண்கள் – யகரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம் -


“ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.”இதுவே பிண்ட இரகசியம்.


வழிபாடு:“மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.”(திருமந்திரம்)


“நமசிவய”வே வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க – மலர் வழிபாடு எனும் அருட்சுனையாம்(அருச்சனை) உந்தியினுள்ளே உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.


நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன: நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

Sunday 8 November 2009

ஓம்/om/ॐ/aum/ओं/唵

ஓங்காரம்(பிரணவம்)


எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை


ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.


இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.

ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"

- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை

- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.


“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.


படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.


ஓம்/om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it's known as the sound of 'big bang'.

Thursday 5 November 2009

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி நரகத்திற்குப் போகாதீர்

இறையின்பத்தை அடைய அன்பே ஒரே மார்க்கம் என்பதே உலகிலுள்ள எல்லா வேதங்களினதும் சாரமாகும். இதை உணராத மனிதர் மாற்றுவழியில் சென்று இறுதியில் நரகத்திற்கே செல்கின்றனர். இதையே சைவசித்தாந்தமும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
-திருமூலர்-

அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. இவ்வன்பு எல்லோரிடமும் இருப்பதுதான். இருப்பினும் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமை காரணமாக அவ்வன்பின் தன்மை வேறுபடும். அங்ஙனம் வேறுபடாது ஒரே தன்மைத்தாய் உள்ள அன்பையே இங்குத் திருமூலர் குறித்துள்ளார்.


இதனால்தான், காரைக்காலம்மையார் திருக்கயிலைப் பெருமானிடம் "இறவாத இன்ப அன்பு" வேண்டினார். இறவாத எனில், கெடுதல் இல்லாததும் என்றும் நீங்காததும் நிலையானதும் ஆகும். அத்தகு நிறைவான இன்பமே பேரின்பம். அப் பேரின்பத்தைப் பெறவே நிலையான அன்பை இங்ஙனம் வேண்டினார். அன்பே இன்பத்திற்கு அடிப்படை என்பதை உணர்த்தினார்.


அன்பும் சிவமும் வேறல்ல என்பதுபோலவே அன்பும் இன்பமும் வேறல்ல.நமது அன்பின் முதிர்விலே முடிவிலா இன்பமான சிவம் வெளிப்பட்டுத் தோன்றும்.


நிலையான அன்புப் பிழம்பாகச் சிவம் திகழ்கிறது. அதனை அடைய நாமும் அன்புருவாய், நிலையான அன்புருவாய் ஆகவேண்டும். நமது அன்பு வளரும்; தளரும்.இறை அன்போ என்றும் ஒரே படித்தாய், உயிர்களிடத்தே நீங்காதிருக்கும். இதனை மணிவாசகரும், திருவாசகம், போற்றித்திருவகவலில் "சாயா அன்பு" என்று குறிப்பிடுகிறார்.

"சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்
தாயேயாகி வளர்த்தனை போற்றி."


கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.
-திருவருட்பா (இறவா நிலை)-

தான் செய்த பாவங்கள் நீங்குவதற்காக கங்கை, காவிரி இன்னும் அநேக புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்று நினைப்பவர்கள் உண்டு. பெருமைக்குரிய கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்துவந்தால் இறையருள் பெருகும் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் விரத அனுஷ்டானம் கடைபிடித்து பட்டினி கிடந்து உடம்பை வருத்தி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் அநேக வேதங்களில் சொல்லப்பட்ட வேள்விகள் செய்து அதன்மூலம் கடவுளின் ஆசி பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் அந்தணர்களாகிய வேதியர்களுக்கு அவர் விரும்புகின்ற அனைத்தும் அள்ளித்தந்து இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் பசுவை பூஜித்தும் அதனுடைய கழிவைப் பருகி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களையும் பின்பற்றி நடந்தபோதிலும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எந்த வகையிலும் ஆன்மலாபம் பெறமுடியாது என்பது அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆசான் இராமலிங்கசுவாமிகளின் உபதேசமாகும்.


ஆன்ம லாபம் பெற விரும்புகிறவர்கள் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யாவர்க்கும்ஆம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்கும்ஆம் பசுவுக் கொருவா யுறை
யாவர்க்கும்ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்கும்ஆம் பிறர்க்கு இன்னுரை தானே
-திருமந்திரம்-


அன்பும் அறிவும்:


சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.


மெய் அன்பில் மெய்யறிவும், மெய்யறிவில் மெய்யன்பும் கலந்தே இருக்கும் என்பது நியதி. இங்கு அன்பின் அடிப்படை அறிவின் அடிப்படை என்றது மிகுதி பற்றி எழுவதையே குறிப்பதாகும்.


இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும். ஆனால் இப்புகழ் உண்மைக்கு மாறாக உபசாரமாகப் பாடப்பட்டது அல்ல. அருளாளர்கள் அருளிய பொருள்சேர் புகழேயாம். என்னெனில், மெய்யறிவும், மெய்யன்பும் உடையாராகலின் இவர்களிடம் மறந்தும் பொய்ப்புகழ் வாராது என்க.


சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும். எனவேதான் தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே என்று இறைவனைப் பாடினார் அப்பர் பெருமான்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
-திருக்குறள்(பொய்யாமொழி/பொய்யாவேதம்)-

உடம்பின் இயல்பை அறிந்து, இல்லறத்தைச் செம்மையாக நடத்தியும், விருந்தை உபசரித்தும், பசித்தோற்கு பசியாற்றியும் மற்றும் அறப்பணிகளைச் செய்து வந்தால், தலைவனாகிய இறைவனைத் தேடி நாம் போகவேண்டியதில்லை. தலைவன் நம்மை நோக்கி வருவான்.